இலங்கையில் மேலும் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பெற வேண்டும்!
18 வயது பூர்த்தியான அனைவரும் TIN இலக்கத்தைப் பெறுவது கட்டாயம்; ஆனால் பதிவு செய்த அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை – இறைவரித் திணைக்களம் விளக்கம்!
இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களில் மேலும் சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN (Taxpayer Identification Number) இலக்கத்தைப் பெற்றுப் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதுவரை சுமார் 1.3 கோடி பேர் TIN இலக்கத்தைப் பெறுவதற்காகப் பதிவு செய்துள்ளதாகவும், இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.7 கோடியாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இன்னும் சுமார் 40 இலட்சம் பேர் TIN இலக்கத்தைப் பெற்றுப் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டால் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், TIN இலக்கத்தைப் பெற்றிருப்பதால் மாத்திரம் ஒருவர் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படாது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒருவர் வரி செலுத்த வேண்டுமா இல்லையா என்பது அவரது வருமானம் மற்றும் நடைமுறையிலுள்ள வரிச் சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி நிர்வாகத்தை முறைப்படுத்தும் நோக்கிலேயே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் TIN இலக்கத்தைப் பெற வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.