நாம் ஏன் தியானம் செய்ய வேண்டும்?
தியானம் என்பது ஆன்மாவை எல்லையற்ற பரம்பொருளுடன் அல்லது இறைவனுடன் மீண்டும் ஐக்கியமாக்கும் அறிவியல் ஆகும். வழக்கமாகவும் ஆழமாகவும் தியானம் செய்வதன் மூலம், உங்கள் ஆன்மாவை—உங்களுடைய இருப்பின் அக ஆழ மையத்தில் உள்ள அமரத்துவ, பேரின்பமய தெய்வீக உணர்வுநிலையை—நீங்கள் விழித்தெழச் செய்வீர்கள். யோகத் தியானம் நமது ஆன்மாவின் எல்லையற்ற செயல்திறனைத் திறக்கும் நெடுங்காலமாக நிரூபிக்கப்பட்ட வழியாகும்.
அது ஒரு தெளிவற்ற மனதளவில் எண்ணும் அல்லது தத்துவார்த்தமாகச் சிந்திக்கும் செயல்முறையல்ல. அது வாழ்க்கையின் கவனச் சிதறல்களிலிருந்து கவனத்தை விடுவிக்கும் நேரடியான வழியாகும்; அது நமது மெய்யான பெரும் சுயத்தை—நாம் அற்புதமான தெய்வீக இருப்பாக நாம் மெய்யாகவே இருப்பதை—அறிவதிலிருந்து நம்மைத் தடுக்கும் கொந்தளிக்கின்ற மற்றும் அமைதியற்ற எண்ணங்களை அமைதிப்படுத்துகிறது.
தியான ஒழுக்கத்தின் வாயிலாக, நாம் அகத்தே ஒருமுகப்படக் கற்றுக் கொள்கிறோம்; அதன் மூலம் நமது அசைக்க முடியாத அமைதி, ஆனந்தம் ஆகியவற்றின் மையத்தைக் கண்டுபிடிக்கிறோம். நீங்கள் தியானத்தில் முன்னேறும் போது, படிப்படியாக நீங்கள் ஆன்மாவிலிருந்து வரும் ஓர் என்றும்-பெருகும் அக அமைதியையும் ஆனந்தத்தையும் அனுபவிக்கிறீர்கள்.
மிக உயர்ந்த நிலைகளில், உங்களுடைய ஆன்மா இறைவனுடனான முழுமையான ஐக்கியத்தை உணர்ந்தறிகிறது. இதுதான் தியானத்தின் இலக்கு—பரவசமான, உயர்-உணர்வான, பேரின்பமிகு தெய்வீகத் தோழமை; அது சமாதி என்றழைக்கப்படுகிறது.
தியானத்தின் மிக உயர்ந்த உத்திகளைக் கற்றுப் பயன்பெற விரும்பும் எவரும் இந்தப் பாடங்கள் ஒரு விலைமதிப்பற்ற ஆதாரமாகவும் வாழ்நாள் முழுவதற்குமான துணையாகவும் இருக்கக் காண்பார். பரமஹம்ஸ யோகானந்தர் கிரியா யோக. அறிவியலின் ஒரு பகுதியாக சக்திவாய்ந்த தியான உத்திகளின் ஒரு அமைப்பைப் போதித்தார்.
இந்த உத்திகள் யோகதா சத்சங்கப் பாடங்கள் வாயிலாகக் கிடைக்கின்றன. நீங்கள் யோகதா சத்சங்கப் பாடங்களுக்காகப் பதிவு செய்திருக்கவில்லை என்றால், நீங்கள் இந்தப் பக்கங்களில் தியானம் செய்வது எப்படி என்பதன் மீதான சில அடிப்படை அறிவுறுத்தல்களை, காண்பீர்கள், அதை உடனடியாகப் பயன்படுத்தி தியானம் கொண்டுவரும் அமைதியையும் தெய்வீக உணர்வுநிலையையும் உங்களால் அனுபவிக்கத் துவங்க முடியும்.