முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரம்!
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மூன்று மீனவர்களையும் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 26.10.2026 அன்று காலை 7.30 மணியளவில் புதுமாத்தளன் பகுதியிலிருந்து MLT/1742 என்ற இலக்கமுடைய படகில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை.
காணாமல்போனவர்கள் முல்லைத்தீவு, அம்பலவன்பொக்கணை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அன்ரனி ஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஸ்ரீ புஷ்பராஜா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 48 வயதுடைய முகம்மட் ரிஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, காணாமல்போன மீனவர்களை விரைவாகக் கண்டறிந்து மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தாமதமின்றி முன்னெடுக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சு, இலங்கைக் கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருடன் தொடர்புகொண்ட அமைச்சர், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
கடற்பரப்பில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாகத் தேடுதல் நடவடிக்கைகளில் சவால்கள் காணப்படுகின்றன.
இதனைக் கருத்திற்கொண்டு, கடல் வழியான தேடுதலுக்கு மேலதிகமாக வான்வழித் தேடுதலையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காணாமல்போன மீனவர்களைத் தேடுவதற்காக இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், திட்டமிட்டபடி இன்று காலை முதல் வான்வழித் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்துமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, கடற்படை உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினருக்கும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
காணாமல்போன மூன்று மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரடிக் கவனம் செலுத்தி வருகின்றார்.