தம்மம் சிறைச்சாலையில் அனோஜனை சந்தித்தார் இலங்கை தூதர் - மேலதிக சட்டநவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதாக தகவல்!
சவுதி அரேபியாவின் தம்மம் சிறைச்சாலையில் சிவராசா அனோஜனை இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், நேற்று சந்தித்துள்ளார்.
அனோஜன் சிவராசா மீதான மரண தண்டனைத் தீர்ப்பை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் இரத்து செய்துள்ள நிலையில், மேலதிக சட்டநடவடிக்கைகள் தொடர்பில் தெரியப்படுத்தவே இந்த சந்திப்பு நிகழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, வரவிருக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து அனோஜன் சிவராசாவுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதாகவும், அவருக்குத் தேவையான தூதரக மற்றும் சட்ட உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகள் குறித்துப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம் குறித்தும், சட்ட நடைமுறைகளின் ஊடாக அனைத்து விடயங்களும் முறையாகக் கையாளப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இந்தச் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தியதாக அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராசாவுக்குத் தூதரகம் தொடர்ந்து தூதரக ரீதியான ஆதரவை வழங்கும் என்றும், நடைபெறவுள்ள சட்ட நடவடிக்கைகளின் போது அவருக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளைப் பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் தூதுவர் அமீர் அஜ்வாத் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.