சபரகமுவ பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டார்!
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மொலகொட, கொடமுதுன்கல ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், அக்கமஹா பண்டிதருமான சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கல்லேல்லே சுமனசிறி தேரரிடம் கையளிக்கப்பட்டது.
சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர், இதற்கு முன்னர் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உபவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.
கல்வித்துறையில் நீண்டகால அனுபவத்தைக் கொண்ட அவர், பௌத்த தத்துவம் தொடர்பான உயர் கல்வியையும் பெற்றுள்ளார். தனது முதலாவது பட்டப்படிப்பை களனிப் பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவம் தொடர்பான சிறப்புப் பட்டமாக நிறைவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும், இந்தியாவின் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் உள்ளிட்ட மேலதிக கல்வித் தகைமைகளையும் பெற்றுள்ளார்.
அத்துடன், கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ள அவர், சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் சீன மொழி தொடர்பான டிப்ளோமா கற்கைநெறியையும் பயின்றுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உயர்கல்வித் துறையில் அனுபவம் கொண்ட சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர், சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.