யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதியை புனரமைக்க விசேட கலந்துரையாடல் – ஆளுநர் நடவடிக்கை!

#SriLanka #Jaffna #NorthernProvince #Governor #LANKA4 #Market #discussion
Abi
1 hour ago
யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதியை புனரமைக்க விசேட கலந்துரையாடல் – ஆளுநர் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் நகர நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை விரைவில் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் தற்போதைய நிலைமைகளை ஆராயும் நோக்கில், ஆளுநரும் யாழ்ப்பாணம் வணிகர் கழகப் பிரதிநிதிகளும் இணைந்து இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை குறித்த கட்டடத் தொகுதியை நேரில் பார்வையிட்டனர்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகப் பிரதிநிதிகள் கடந்த 20ஆம் திகதி ஆளுநரைச் சந்தித்தபோது, நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் நிலவும் குறைபாடுகள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் எடுத்துரைத்திருந்தனர். 

இதன்போது, கட்டடத் தொகுதியை நேரில் பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்வதாக ஆளுநர் உறுதியளித்திருந்தார். அதற்கமையவே இன்றைய களப்பயணம் இடம்பெற்றது. இதன்போது, கட்டடத் தொகுதி முறையாகப் பராமரிக்கப்படாமை, பல ஆண்டுகளாக வர்ணம் பூசப்படாமை, புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

அத்துடன், வர்த்தகர்கள் தமது கடைகளைப் புனரமைப்பதற்கு அனுமதி பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மலசலகூடங்கள், பயன்பாடின்றிக் காணப்படும் கட்டடப் பகுதிகள் மற்றும் பாதுகாப்புக்கான வாயில் கதவுகள் இல்லாமை போன்ற பிரச்சினைகளையும் வணிகர் கழகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். குறித்த குறைபாடுகள் தொடர்பில் ஆளுநர் நேரில் பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்தார்.

நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களிடமிருந்து வாடகையாகப் பெருமளவு வருமானம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குக் கிடைக்கின்ற போதிலும், கட்டடத்தின் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என வர்த்தகர்கள் கவலை வெளியிட்டனர்.

மாநகர சபைக்குக் கிடைக்கும் வாடகை வருமானத்தில் ஒரு பகுதியை நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் பராமரிப்புக்காக ஒதுக்குவதன் மூலம், அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், வர்த்தகர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அந்தக் கலந்துரையாடலின் ஊடாக உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் எனப் பிரித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் இக் களப்பயணத்தில் ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்ற ஆளுநரின் உறுதிமொழி, அங்குள்ள வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!