குடத்தனை வடக்கில் 5,000 பனம் விதைகள் நடுகை!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்குப் பகுதியில் 5,000 பனம் விதைகள் இன்றைய தினம் (22) நாட்டி வைக்கப்பட்டுள்ளன.
பனை அபிவிருத்திச் சபையின் 5 மில்லியன் பனம் விதைகள் நடுகைத் திட்டத்தின் கீழ், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் குறித்த பனம் விதைகள் நடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குடத்தனை வடக்கு செம்மக்காலைப் பகுதிக்குப் பின்னால் அமைந்துள்ள அரச காணியில் இந்நடுகை நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது, குடத்தனை வடக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பனை அபிவிருத்திச் சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு 5,000 பனம் விதைகளையும் நாட்டி வைத்தனர்.
பனை வளத்தைப் பாதுகாத்து, அதன் பரம்பலை அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் பனை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கிலும் இவ்வாறான பனம் விதைகள் நடுகைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய வளங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள பனை மரங்களைப் பாதுகாத்து, எதிர்காலச் சந்ததியினருக்காக அவற்றை நிலைபேறான முறையில் வளர்த்தெடுப்பதற்கு இத்தகைய திட்டங்கள் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.