ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி 7 ஆவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, பௌத்த பிக்குகள் முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (22) ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள், ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தில், பூங்காவில் தற்காலிகக் கொட்டகை அமைக்க முற்பட்டபோது பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அங்கு பதற்றமான சூழலும் நிலவியது.
இதற்கு முன்னதாக, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தங்கியிருந்த பிக்குகள், பின்னர் பௌத்தசாசன அமைச்சுக்குச் சென்று அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
எனினும், குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகத் தெரிவித்த பிக்குகள், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமகாதேவி பூங்காவில் தொடர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி மகா சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.