மின்வெட்டு முதல் விலையேற்றம் வரை: அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியே காரணம் என ஹெக்டர் அப்புஹாமி சாடல்!

#SriLanka #Kamal Gunaratna #Parliament #prices #government #LANKA4 #power cuts
Abi
3 hours ago
மின்வெட்டு முதல் விலையேற்றம் வரை: அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியே காரணம் என ஹெக்டர் அப்புஹாமி சாடல்!

அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் முறையற்ற தீர்மானங்கள் காரணமாகவே நாட்டில் மின்வெட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று புதன்கிழமை (21) கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்குத் தரமற்ற நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டமையே மின்வெட்டுக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், நிலக்கரி கொள்வனவு தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து உடனடியாகப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், பாண், மா, சீனி, அரிசி, தேங்காய் மற்றும் தேயிலை உள்ளிட்ட பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வரிச்சுமையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், தொழில்துறையினரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார். அரசாங்கம் அபிவிருத்தி குறித்து பெருமையாகப் பேசினாலும், கிராமப்புறங்களில் தெரு விளக்குகளைப் பராமரித்தல் மற்றும் வீதிகளிலுள்ள குழிகளைச் சீரமைத்தல் போன்ற அடிப்படைப் பணிகளைக்கூட உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என அவர் விமர்சித்தார். 

அபிவிருத்தி என்பது வெறும் வார்த்தைகளில் அல்லாமல், நடைமுறைச் செயற்பாடுகளில் வெளிப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், காவன்திஸ்ஸ யானையின் மரணத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியது அரசாங்கமும் வனஜீவராசிகள் திணைக்களமுமே எனக் குற்றஞ்சாட்டிய அவர், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதுடன், அனைத்து இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 

பௌத்த மதத்தைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!