குவைத் – கட்டுநாயக்க விமானத்தில் ஆண் குழந்தையைப் பிரசவித்த திருகோணமலைப் பெண்!
குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் ஆண் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் கடந்த 2024ஆம் ஆண்டு பணிப்பெண்ணாகப் பணியாற்றுவதற்காகக் குவைத்திற்குச் சென்றுள்ளார்.
இன்று (19) அதிகாலை 2.52 மணியளவில் குவைத் சிட்டி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்ட ஜசீரா விமான சேவைக்குச் சொந்தமான J9-551 என்ற விமானத்தில் பயணித்தபோதே அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
விமானப் பயணத்தின்போது கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டிய மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் விமான சேவை விதிமுறைகள் உள்ள நிலையில், குறித்த பெண் தனது கர்ப்ப நிலையை விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், விமானப் பணிக்குழுவினரின் உதவியுடன் விமானத்தினுள்ளேயே எவ்வித சிக்கல்களுமின்றி பிரசவம் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, விமானி கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார். இதன்பேரில், விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே அவசர அம்பியூலன்ஸ் வண்டி, மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கிய குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, தாயும் சேயும் மேலதிக மருத்துவச் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.