அச்சிடும் உபகரணங்களுக்கு பற்றாக்குறை : சாரதி அனுமதிப் பத்திரங்கள், வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் பெரும் தேக்கம்!
இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1.6 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் மற்றும் தகடுகள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சிடும் உபகரணங்கள் மற்றும் வெற்று அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக, சுமார் 673,000 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன்தற்போது கையிருப்பில் உள்ள பத்து லட்சம் அட்டைகள் 2027 ஜனவரி மாதத்திற்குள் தீர்ந்துவிடும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.
இருபது லட்சம் அட்டைகளை வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், அதன் முதல் தொகுதி 2027 மார்ச் மாத இறுதியில் தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பற்றாக்குறையை சமாளிக்க தற்போதுள்ள விநியோகஸ்தரிடமிருந்து மேலதிகமாக 500,000 அட்டைகளை வாங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான இந்தத் தேக்கம் முழுமையாக நீக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.