யாழ்ப்பாணத்தில் ரூ.190 மில்லியன் செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாத்து, அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், 190 மில்லியன் ரூபா செலவில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் நடைபெற்றது.
இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு நிலத்தடி நீர் முக்கிய ஆதாரமாக விளங்குவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், கட்டுப்பாடற்ற நீர்ப்பயன்பாடு, இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களின் அதிகப்படியான பயன்பாடு, முறையற்ற கழிவகற்றல் ஆகியவை நிலத்தடி நீரின் தரத்தையும் கிடைப்பையும் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
எனவே, நீர் வளங்களைப் பாதுகாப்பதுடன், குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் பாதுகாப்பான நீர் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
புதிதாக அமைக்கப்படும் முகாமைத்துவப் பிரிவின் ஊடாக நிலத்தடி நீரின் அளவு மற்றும் தரத்தைக் கண்காணித்தல், நீர் மாசுபடும் அபாயங்களைக் கண்டறிதல், நிலத்தடி நீர் வளங்களை வரைபடமாக்குதல், குழாய்க் கிணறுகளை அமைப்பதற்கான தொழில்நுட்ப மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் நீரை மீள்நிரப்புவதற்கான திட்டங்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், வடக்கு மாகாணத்தின் தனித்துவமான நிலத்தடி நீர் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குழாய்க் கிணறுகளை அமைத்தல், அவற்றின் பயன்பாடு, நீர் எடுக்கும் அளவு மற்றும் கண்காணிப்பு தொடர்பான விதிமுறைகளை வலுப்படுத்தும் வகையில் புதிய வர்த்தமானி அறிவித்தலை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
மழைநீரைச் சேமித்தல், இயற்கையான நீர்வழிகளைப் பாதுகாத்தல் மற்றும் நிலத்தடி நீரை மீள்நிரப்புதல் போன்ற நடவடிக்கைகள் அறிவியல் ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிலத்தடி நீரைப் பாதுகாப்பது அரச நிறுவனங்களின் பொறுப்பு மட்டுமல்ல எனக் குறிப்பிட்ட ஆளுநர், விவசாயிகள், உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர், பிரதியமைச்சர், யாழ்ப்பாண மாவட்டச் செயலர், நீர்வளச் சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.