யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு இருமடங்கு நிதி; செயற்படுத்த ஆளுநர் வலியுறுத்தல்

#SriLanka #Jaffna #government #Development #District #Project #LANKA4
Riya
3 hours ago
யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு இருமடங்கு நிதி; செயற்படுத்த ஆளுநர் வலியுறுத்தல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு இருமடங்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணைத் தலைமையிலும் ஒக்டோபர் 14ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், புதிய திட்ட முன்மொழிவுகள், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் சில அபிவிருத்தித் திட்டங்களை மீள்மதிப்பீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வீதி அபிவிருத்திப் பணிகளுக்கான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நிறைவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான 'சமூக சக்தி' தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 334 திட்டங்களை முன்னெடுப்பதற்காக 651.96 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவுகள் ஆராயப்பட்டன.

மேலும், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 18 வீதிகளைப் புனரமைப்பதற்காக 191.40 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், வீதிப் பாதுகாப்பு மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் 28 பணிகளுக்காக 62.95 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமையும் கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டது.

வீடமைப்பு, விவசாயம், சிறு நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டதுடன், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் தடைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், உயிரியல் சுத்திகரிப்பு ஆலைகளைக் கையளித்தல், நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளைக் கொண்டு செல்வது மற்றும் மாவட்டத்தின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!