யோதிலிங்கம் ஐயாவின் இழப்பு தமிழ்த்தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

#SriLanka #Gajendrakumar Ponnambalam #Tamil #LANKA4
Riya
2 hours ago
யோதிலிங்கம் ஐயாவின் இழப்பு தமிழ்த்தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மூத்த அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கத்தின் மறைவு, தமிழ்த்தேசத்திற்குப் பேரிழப்பாகும் எனத் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யோதிலிங்கத்தின் மறைவையொட்டி இன்று (09) வெளியிட்ட இரங்கல் செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யோதிலிங்கம் ஐயா ஓர் ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் மட்டுமல்ல.

தனது பார்வையில், இவை அனைத்தையும் தாண்டி அவர் ஒரு சிந்தனையாளர் எனக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

அன்றாட வாழ்க்கையின் கடமைகளுக்கு அப்பால், சமூகம், தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த்தேசம் குறித்து ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட்டவர் யோதிலிங்கம் ஐயா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களும் தமிழ்த்தேசமும் எதிர்கொண்ட பெரும் ஆபத்துகளைப் புரிந்துகொள்வதுடன், தமிழ் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய அரசியல் அபாயங்களை முன்கூட்டியே கணிக்கும் திறனும் அவரிடம் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கி, பின்னர் சட்டத்தரணியாகச் செயற்பட்ட யோதிலிங்கம், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்தார்.

இதற்காகத் தனது குடும்ப நலன்களிலும் சமரசம் செய்துகொண்டதாக அவர் அடிக்கடி கூறியதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த்தேசியம், தமிழ் இறையாண்மை மற்றும் தமிழ்த்தேசத்தின் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் மீது யோதிலிங்கம் கொண்டிருந்த அர்ப்பணிப்பு அளப்பரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி அமைத்தல் உள்ளிட்ட தந்திரோபாய அரசியல் விடயங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டபோதிலும், தமிழ்த்தேசியத்தின் மீதான யோதிலிங்கத்தின் அர்ப்பணிப்பைத் தாம் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புவிசார் அரசியல், உலகளாவிய அரசியல் போக்குகள், இனவாதம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான சிக்கலான விடயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டு, அவற்றைச் சாதாரண மக்களுக்கும் தெளிவாக விளக்கும் ஆற்றல் யோதிலிங்கத்திடம் இருந்ததாகக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அவரது எழுத்துக்கள் தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், யோதிலிங்கம் விட்டுச்சென்ற வெற்றிடத்தின் தாக்கம் எதிர்காலத்தில் பெரிதும் உணரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, தனது தனிப்பட்ட சார்பிலும், தமிழ்த்தேசியப் பேரவை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையையும் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யோதிலிங்கத்தின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!