மார்பகப் புற்றுநோயால் நாளொன்றுக்கு 3 பேர் உயிரிழப்பு – தினமும் 17 புதிய நோயாளர்கள்
இலங்கையில் மார்பகப் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு மூன்று பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கைப் பெண்களிடையே அதிகளவில் காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுவதாகவும், ஆண்டுதோறும் 6,000க்கும் அதிகமான புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழப்பதாகவும், இதன்படி தினமும் சராசரியாக 17 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் மூவர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் தென்பட்ட போதிலும், பலர் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதில் தாமதிப்பதாகவும், இதனால் சிகிச்சையின் சிறந்த முடிவுகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் வைத்தியர் சேனக தலகல சுட்டிக்காட்டினார்.
எனவே, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையைப் பெறுவதுடன், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.