போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான மரண தண்டனை ஆவணங்களில் கையெழுத்திட்ட ஒரே தலைவன் நான்தான் - மைத்திரி
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான மரண தண்டனை ஆவணங்களில் கையெழுத்திட்ட ஒரேயொரு அரச தலைவர் தானே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நான் தற்போது செயற்பாட்டு அரசியலில் ஈடுபடவில்லை. புத்தகங்களை எழுதுவதிலும் வாசிப்பதிலும், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதிலும், பொதுமக்களுடன் தொடர்புகளைப் பேணுவதிலும் எனது நேரத்தை செலவிட்டு வருகின்றேன்.
எனது அறிவை மேலும் அதிகரித்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என்று கூற முடியாது.
அரசியலில் ஈடுபடாத ஒருவருக்கும் அரசியல் கருத்து இருக்கும். தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொருவரும் தமது அரசியல் கருத்துக்கு அமைவாகவே வாக்களிக்கின்றனர்.
எனினும், தற்போது எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்பாட்டு அரசியலில் ஈடுபடவில்லை. எனது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பில் நான் மிகவும் திருப்தியடைகின்றேன். எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சுமார் 160 பணிகளை நிறைவேற்றினேன்.
எனினும், எனது நேர்மையான நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. அரசாங்கத்தின் உள்ளக காரணங்களே அதற்குக் காரணமாக அமைந்தன. நான் ஐந்து வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தபோது அரசாங்கத்தினதும் எதிர்க்கட்சியினதும் முழுமையான ஆதரவு எனக்கு இருக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் ஆதரவு கிடைக்கவில்லை.
அவ்வாறான சூழ்நிலையிலும் நாட்டை முன்னெடுத்துச் சென்றேன். 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் ஆறு மாதங்களுக்குள் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினேன். ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் வலுப்படுத்தும் நோக்கத்துடனேயே அதனை கொண்டுவந்தேன்.
எனது ஜனாதிபதி பதவிக்காலம் ஆறு வருடங்களாக இருந்தபோதிலும் அதனை ஐந்து வருடங்களாகக் குறைத்துக்கொண்டேன். 100 நாள் வேலைத்திட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கு முக்கியத்துவம் வழங்கினேன். மதுபானம், சிகரெட், புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பில் சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தேன்.
சிறையில் இருந்த நான்கு போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் நான் கையெழுத்திட்டேன். இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான மரண தண்டனை ஆவணங்களில் கையெழுத்திட்ட ஒரேயொரு அரச தலைவர் நான்தான்” எனக் குறிப்பிட்டார்.