நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை
இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், தற்போது 'ஆழ்ந்த தாழமுக்கமாக' வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வளிமண்டலத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், இதன் திசையை நோக்கிய காற்று வீச்சு காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை தொடரக்கூடும்.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.