அனோஜன் குடும்பத்தினருக்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஆறுதல் – கொழும்பில் போராட்டத்திற்கு அழைப்பு!
சவூதி அரேபியாவில் தண்டனையை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை, ஜனசெத பெரமுன தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (22) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
கல்முனை நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜனின் வீட்டுக்குச் சென்ற குழுவினர், குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்களையும் வழங்கியதுடன், அனோஜனை தண்டனையிலிருந்து மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி நாளை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை (28) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு சென்று அனோஜன் தொடர்பான கோரிக்கை மகஜரை கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக அனோஜனின் குடும்பத்தினரையும் கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில், குடும்பத்தினர் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அனோஜனின் தாயார் தனது மகனை மீட்டுத் தருமாறு இலங்கை மக்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்ததுடன், தனது மகன் செய்த தவறுக்காக மன்னிப்பும் கோரினார்.