தனியார் முதலீட்டிற்காக திறக்கப்படும் கனடாவின் மிகப்பெரிய நான்கு விமான நிலையங்கள்
கனடாவின் நான்கு மிகப்பெரிய விமான நிலையங்களை தனியார் முதலீட்டிற்குத் திறக்கவிருப்பதாகவும் விமான நிலையங்களுக்கான நிலத்தின் உரிமையை ஒட்டாவா (அரசு) தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்றும் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையம், வான்கூவர் சர்வதேச விமான நிலையம், மாண்ட்ரியலில் உள்ள ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் மற்றும் கல்கரி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை இயக்குவதற்கான "நீண்ட கால உரிமங்கள்" (long-term concessions) மூலம் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று பிரதமர் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நாங்கள் திரட்டும் பல பில்லியன் டாலர் மூலதனத்தை, அடுத்த தலைமுறைக்குத் தேவையான கனடாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மீண்டும் முதலீடு செய்வோம்" என்று மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கனடா முழுவதும் சுமார் 167 திட்டங்களில் 1 டிரில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் 100க்கும் மேற்பட்டோரை இந்த உச்சி மாநாட்டிற்கு கார்னி அழைத்துள்ளார்.