வறட்சிப் பகுதிகளில் ஒக்டோபர், நவம்பரில் மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் பல பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வரும் கடுமையான வறட்சிக்கு மத்தியில், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக, மொனராகலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (10) பிற்பகல் மிதமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் நிலவிய கடும் வெப்பமான காலநிலை ஓரளவு தணிந்துள்ளதுடன், குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்த மழை உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, நாட்டின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 135,037 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, எதிர்வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே