யாழ்ப்பாணத்தில் நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு திரும்பிய இளைஞர் மீது வாள்வெட்டு!
யாழ்ப்பாணம், வேலணை அராலிச் சந்தி பகுதியில் நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 09.09.2026 அன்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் சிலர் அவரை வழிமறித்துள்ளனர்.
இதன்போது, மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் குறித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் கடுமையாக காயமடைந்த இளைஞர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் வழிமறித்து தாக்கப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே