கல்வி அமைச்சில் ஹரிணி பங்கேற்பில் மீலாதுன் நபி விழா!

#SriLanka #Festival #LANKA4 #education #Ministry #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
கல்வி அமைச்சில் ஹரிணி பங்கேற்பில் மீலாதுன் நபி விழா!

“பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்தை வளர்ப்பதற்கான வலிமையான கருவி கல்வி” – பிரதமர் ஹரிணி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 மீலாதுன் நபி விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் தொடர்பான புரிதலை மக்களிடையே ஏற்படுத்துவதற்கு கல்வி மிகவும் வலிமையான கருவியாகும் என தெரிவித்தார்.

முஹம்மது நபி அவர்கள் சமத்துவத்திற்கு முன்னுரிமை அளித்ததுடன், ஆதரவற்றவர்களை கவனித்தல், அடிமைத்தனத்தை ஒழித்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களுக்காக குரல் கொடுத்த தலைவராக வரலாற்றில் போற்றப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், உலகம் தற்போது அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், ஆயுத மோதல்களால் அப்பாவி மக்கள் உயிரிழப்பதுடன், மில்லியன் கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சூழலில், முஹம்மது நபியின் போதனைகளும் முன்மாதிரிகளும் இன்றைய உலகிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என பிரதமர் தெரிவித்தார்.

இலங்கை பல்வேறு இனங்கள், மொழிகள், கலாசாரங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்ட பன்முகத்தன்மை நிறைந்த நாடாகும் என குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பன்முகத்தன்மையை நாட்டின் மிகப்பெரும் பலங்களில் ஒன்றாக அரசாங்கம் கருதுவதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு குடிமகனும் சமமான மரியாதை, சமமான வாய்ப்பு மற்றும் பொது சேவைகளுக்கான சமமான அணுகலைப் பெறக்கூடிய இலங்கையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.

சமூக முன்னேற்றத்தையும் சமத்துவத்தையும் அடைவதற்கு கல்வியே மிகவும் வலிமையான கருவி என தெரிவித்த பிரதமர், குழந்தையின் குடும்பப் பின்னணி அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இலவசக் கல்வியின் மூலம் உயர்கல்வி வரை கற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பாடசாலைகள் மாணவர்கள் தமது சொந்த கலாசாரத்தை மட்டுமன்றி, ஏனைய சமூகங்களின் கலாசாரங்களையும் அறிந்து புரிந்துகொள்ளும் இடங்களாக அமைய வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்புகளின் ஊடாக புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்த்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை உருவாக்குவதே நோக்கம் என பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், அனைவரும் நல்லிணக்கத்துடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவதற்கு பங்களிக்கக்கூடிய எதிர்கால குடிமக்களை உருவாக்குவது புதிய கல்வி மறுசீரமைப்பின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தற்போதைய கல்வி மாற்றத்தின் போது முஹம்மது நபி எடுத்துக்காட்டிய முன்மாதிரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான கல்வி உரிமையை உறுதி செய்வதற்காக உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகள் மூலம் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வில் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4