குறிஞ்சாக்கேணி குளம் முதல் காணி, போக்குவரத்து வரை – மண்முனை மேற்கு மக்களின் பிரச்சினைகள் முன்வைப்பு
மண்முனை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறிஞ்சாக்கேணி குளத்தின் புனரமைப்பு, காணி விவகாரங்கள், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிரதேச மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
நடைபெற்ற இக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான க. பிரபு தலைமையில், பிரதேச செயலாளரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில், மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளருக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படாதமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. உள்ளூராட்சி பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பது மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் உள்ளூராட்சி தேவைகளை நேரடியாக எடுத்துரைப்பதற்கு முக்கியமானது என வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, பிரதேச சபையின் உப தவிசாளர் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தாண்டியடி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட குறிஞ்சாக்கேணி குளத்தின் புனரமைப்பு தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குளத்தை மண்ணகழ்வு செய்து புனரமைப்பதுடன், அதன்மூலம் கிடைக்கும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
குளப் புனரமைப்பின் மூலம் கிடைக்கும் வளங்களில் ஒரு பகுதியை மண்முனை மேற்கு பிரதேச சபைக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மண்முனை மேற்கு பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து, பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களின் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதுடன் மட்டுப்படாமல், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேசத்தின் அபிவிருத்தி கட்டுமானப் பணிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, காணி மற்றும் விவசாயம் உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த. கோபாலபிள்ளை, உப தவிசாளர் டிசாந் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்டவர்கள் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பான தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
குறித்த விடயங்களில் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து, மக்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே