அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: யாழ். உணவகத்திற்கு ரூ.9.5 இலட்சம் அபராதம்!
யாழ்ப்பாணத்தில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த உணவகத்திற்கு ரூ. 950,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, 1 லீற்றர் குடிநீர் போத்தல் ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூ.200க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ரூ.9.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதியிடப்பட்ட விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்த்து, செலுத்திய பணத்திற்கான முறையான பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட நுகர்வோர் சட்ட மீறல்கள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே