“எங்கள் உயிரின் மதிப்பு ரூ.1 இலட்சமா?” – 4,000 நாட்களாக தொடரும் போராட்டம்

#SriLanka #LANKA4 #life #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
“எங்கள் உயிரின் மதிப்பு ரூ.1 இலட்சமா?” – 4,000 நாட்களாக தொடரும் போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி மற்றும் உண்மை கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் 4,000 நாட்களைக் கடந்தும் தொடர்வதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு தொடர்பாக ஆலையடிவேம்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டில் அரசியல்வாதிகள், மதகுருமார்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

பல வருடங்களாக உறவுகளைத் தேடி போராடி வருகின்ற போதிலும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும், இதன் காரணமாக தமது போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் செல்வராணி தெரிவித்தார்.

தங்களுடன் இணைந்து போராடிய 600க்கும் மேற்பட்ட தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், அவர்களை நினைவுகூரும் வகையில் மாநாட்டில் விசேட நூல்கள் வெளியிடப்பட்டு, அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், காணாமலாக்கப்பட்ட உறவுகள் விட்டுச் சென்ற நினைவுப் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்படவுள்ளதுடன், காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களைத் தாங்கிய ஊர்தியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

OMP மீது நம்பிக்கை இல்லை என குற்றச்சாட்டு காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகமான OMP மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த செல்வராணி, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த உறவுகள் சாட்சியங்களுடன் ஐந்து கோப்புகளை OMP-யிடம் கையளித்து சுமார் ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதிலும், அவை தொடர்பில் உரிய பதில் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். பின்னர் அந்தக் கோப்புகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, அவை தொலைந்துவிட்டதாகவும், மீண்டும் வழங்கினால் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“எங்களுக்கு நிதியைவிட தேவை நீதி மற்றும் உண்மை” வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு தொடர்பிலும் செல்வராணி கடும் விமர்சனம் முன்வைத்தார்.

“எங்களது உறவுகளின் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாயா? அந்த ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் போராடவில்லை. எங்களுக்கு நிதியைவிட தேவை நீதி மற்றும் உண்மை” என அவர் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமது தொடர் போராட்டம் 4,000 நாட்களைக் கடந்துள்ளதாகவும், தாய்மார்கள் உயிரிழந்தாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச பொறிமுறை அவசியம் – கவீந்திரன் கோடீஸ்வரன் இதே ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான உண்மையான நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச பொறிமுறை அவசியம் என வலியுறுத்தினார்.

 உண்மையைக் கண்டறிதல், நீதியான விசாரணை, பொறுப்புக்கூறல், இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள மக்கள் கலந்துகொண்டு ஆதரவளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அழைப்பு விடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4