காமன்வெல்த் வெள்ளிப் பதக்க வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை, நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி தனது காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் காண்பித்தார்.
அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய சிம்ரன், இந்தச் சாதனை ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அவர் அடைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
மேலும், சர்வதேச அரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகக் கூறிய சிம்ரன், தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மேலும் பல வெற்றிகளையும் பதக்கங்களையும் வெல்ல வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.
தொடர்ந்து ராஜா முத்துப்பாண்டியுடன் அன்பாக உரையாடிய சிம்ரன், அவரது சொந்த ஊரான கோவில்பட்டி மற்றும் குடும்பத்தினர் குறித்தும் விசாரித்தார்.
கோவில்பட்டி குறித்து தனது திரைப்படத் தொடர்பான நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். சந்திப்பின் இறுதியில், ராஜா முத்துப்பாண்டி தனது வெள்ளிப் பதக்கத்துடன் நடிகை சிம்ரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தமிழக வீரரின் சாதனையைப் பாராட்டி நடைபெற்ற இந்தச் சந்திப்பு, அவரது எதிர்கால விளையாட்டுப் பயணத்திற்கு உற்சாகம் அளிக்கும் இனிய தருணமாக அமைந்தது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே