20 மில்லியன் ரூபா கொள்ளை குற்றச்சாட்டு: 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி சாந்த பண்டார முறைப்பாடு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, தனது மகன் 20 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளால் தமக்கும், தமது குடும்பத்தினருக்கும், அரசியல் கட்சிக்கும் ஏற்பட்ட நற்பெயர் களங்கத்துக்காக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRCSL) முறைப்பாடு செய்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாந்த பண்டார, தனது மகன் தொடர்பான கொள்ளைச் சம்பவக் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு, ஒரு திரைப்படத்தைப் போன்று மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸாரின் விசாரணையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சம்பவம் இடம்பெற்ற இடம் தொடர்பிலும் அதிகாரிகள் வெவ்வேறு தகவல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதித்துறை இந்த விவகாரத்தை சுயாதீனமாக ஆராய்ந்ததாகவும், தமது சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியபோது பொலிஸாரால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிரிகள் தம்மை இலக்கு வைத்து தனது இளைய மகனை இந்த விவகாரத்தில் சிக்கவைத்துள்ளதாகவும், இதனால் தனது குடும்பம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் சாந்த பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்லுப்பிட்டியில் சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபா கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உட்பட ஆறு பேர் ஜூலை 21ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே