‘ஐஸ்’ போதையில் பேருந்தை ஓட்டிய சாரதி கைது!
கொழும்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை ‘ஐஸ்’ போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் செலுத்தியதாகக் கூறப்படும் சாரதியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் பேருந்தின் உரிமையாளரும் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் முல்லைத்தீவு இடையே சேவையில் ஈடுபடும் சில தனியார் பேருந்துகளின் சாரதிகள் நீண்டகாலமாக ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்தி வாகனங்களை செலுத்துவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வவுனியா மற்றும் புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், புளியங்குளம் பொலிஸ் பிரிவில் குறித்த பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது இந்த விடயம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதி நாளொன்றுக்கு சுமார் 2 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்தி, போதிய ஓய்வின்றி நீண்டதூரம் பயணிகளை ஏற்றிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சாரதியின் கடும் களைப்பு மற்றும் உடல் ரீதியான அசௌகரியங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதித்ததாகக் கூறப்படும் பேருந்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே