யாழ்ப்பாணத்தில் 'காயல் கவிதைத் திருவிழா 2026' கோலாகல ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கைலாசபதி அரங்கில் ஆரம்பமான "காயல்: யாழ்ப்பாணக் கவிதைத் திருவிழா 2026.
தமிழகக் கவிஞர் சுகுமாரனுக்கு பாணர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழகம் - இன்று மாலை கலத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் - ஆங்கிலத்துறை மற்றும் கலம், கட்டுமரம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் 'காயல்: யாழ்ப்பாணக் கவிதைத் திருவிழா 2026' நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் பத்மநாதன் ஷ்யாம்கிருஷ்ணா குழுவினரின் இரட்டை வயலின் இசையோடு ஆரம்பமானது.
விருந்தினர்களின் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து வாழ்த்துரைகளினை யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பூ. ஐங்கரன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கலாநிதி ரி.விக்னேஸ்வரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். கவிஞரும், விரிவுரையாளருமான பாக்கியநாதன் அகிலன் அவர்கள் தலைமையுரையினை நிகழ்த்தினார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் காயலும் இணைந்து தமிழகக் கவிஞர் சுகுமாரனுக்கு பாணர் வாழ்நாள் சாதனையாளர் விருது முதன்முறையாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குட்டிரேவதி மற்றும் அனிதாதம்பி ஆகியோருக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து விரிவுரையாளர்களான த. அஜந்தகுமார், இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோரின் நெறியாள்கையில் தளை நீக்கும் கவிதைகள் எனும் தலைப்பில் யாழ். பல்கலை மாணவர்களின் பங்கேற்புடனான கவிதைகள் ஆற்றுகை நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து தனராஜ் இராசையாவின் பேசாதவற்றை நடன நிலைப்படுத்தல் எனும் தனி ஆற்றுகையும் இடம்பெற்றது.
தொடர்ந்து சத்தியன் குழுவினரின் 80 களுக்கு சென்று வருதல் - எங்கள் மண்ணும் இந்த நாட்களும், கவிதா நிகழ்வு பாடல்களுடன் இடம்பெற்றது. தொடர்ந்து வரவுக் கவிஞர்களின் கவிதை வாசிப்புடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.
இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாண பல்கலையில் கவிஞர் சுகுமாரனின் கவிதைப் பட்டறையும், யாழ்ப்பாணக் கல்லூரியில் கவிஞர் குட்டிரேவதி அவர்களின் மாணவர்களுக்கான கவிதைப் பட்டறையும், தொடர்ந்து கவிஞர்கள் கலந்துரையாடலும் மதியம் வரை இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு கண்டி வீதியிலுள்ள கலை மற்றும் பண்பாட்டுச் சந்திப்பு வெளியான கலத்தில் பா. அகிலன் அவர்களின் இல்லாமையின் புவியியல் கவிதை தாபனக் கலைக் காட்சியும், ம. நிலாந்தனின் சுவர்க் கவிதைக் காட்சியும், ஈழ - தமிழக கவிஞர்கள் இணைந்து வழங்கும் கவிதை வாசிப்பும் இடம்பெறவுள்ளது.
தமிழகக் கவிஞர்களான சுகுமாரன், குட்டிரேவதி மற்றும் மலையாளக் கவிஞர் அனிதாதம்பி மற்றும் ஈழக் கவிஞர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் கவிதைத் திருவிழாவின்
இன்றைய நிகழ்வுகளிலும் இலக்கிய ஆர்வலர்கள், கவிதை எழுதுபவர்கள், பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே