ஐந்து ஜனாதிபதி மாளிகைகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி
இலங்கையில் பெந்தோட்டை, கதிர்காமம், மஹியங்கனை, எம்பிலிப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 5 ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத்துறை முதலீட்டுத் திட்டங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சுற்றுலாத் துறையில் முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக முன்மொழிவுகளைக் கோரி, தகுதியான முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்த மாளிகைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசுக்கு சொந்தமான ஓய்வுவிடுதிகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான பொருத்தமான பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமைகள் மற்றும் தனிப்பட்ட ஓய்வு நேரங்களின் போது பயன்படுத்துவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல ஜனாதிபதி மாளிகைகள் பராமரிக்கப்பட்டு வந்தபோதிலும், தற்போதைய ஜனாதிபதி அவற்றை தனது பணிகளுக்குப் பயன்படுத்துவதில்லை.
மிகவும் உயர்ந்த கட்டடக்கலை மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்ட இந்த மாளிகைகள் முழுமையான வசதிகளுடனும், கவர்ச்சிகரமான நிலப்பரப்புகளுடனும் அமைந்துள்ளன.
தற்போது ஜனாதிபதி செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாளிகைகளைப் பராமரிப்பதற்கும், பாதுகாப்பு அளிப்பதற்கும், ஏனைய செலவுகளுக்காகவும் கணிசமான அளவு அரச நிதி செலவிடப்பட்டு வருகிறது.
இந்தச் செலவினங்களைக் குறைத்து, அரச சொத்துக்கள் மூலம் பொருளாதாரப் பலன்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இவை நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே