கிழக்கு ஆளுநர் செயலகத்தின் முன் அதிபர்கள் சுழற்சி முறை போராட்டம்!
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆளுநருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மகஜரையும் ஆளுநர் கையேற்க மறுத்துள்ள நிலையில், நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் சுழற்சி முறையில் நடைபெறும் எனப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக (5 முதல் 10 வருடங்களுக்கு மேலாக) அதிபர்களாகப் பணியாற்றி, பாடசாலைகளைத் தரம் உயர்த்திய கல்வியாளர்களை, தற்போது கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் திடீரென மீண்டும் சாதாரண ஆசிரியர் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.
இத்தனை வருடங்களாகப் பெற்ற பாடசாலை நிர்வாக ஆளுமையை விடுத்து, மீண்டும் வகுப்பறைப் பயிற்சிக்கு அனுப்புவது தங்களது தொழில்முறை கௌரவத்தைப் பாதிப்பதாக அதிபர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுவது போல, 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டக் கொள்கைகளின்படி, அரச துறைகளில் தற்காலிக, ஒப்பந்த மற்றும் கடமைநிறைவேற்று அடிப்படையில் நீண்டகாலமாகப் பணியாற்றுவோரை நிரந்தரமாக்குவதற்கான கொள்கை ரீதியான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இதனைத் தமக்கும் சாதகமாகப் பயன்படுத்தி, மாகாண மட்டத்தில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்குத் தங்களை உள்வாங்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான வாதமாகும்.
இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தில் மட்டுமே இவ்வாறான கடுமையான தற்காலிக அதிபர்கள் நீக்க நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
யுத்தம் மற்றும் சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் பாடசாலைகளைத் தாங்கிப் பிடித்த தங்களுக்கு, தற்போது உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவது மாகாணக் கல்வி நிர்வாகத்தின் பாரபட்சமான போக்கைக் காட்டுவதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
ஆளுநர் தங்களைச் சந்திக்க மறுத்ததாலும், கோரிக்கை மகஜரைக் கையற்க மறுத்ததாலும், திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக இந்தத் தொடர் சுழற்சி முறைப் போராட்டம் (Continuous Rotational Protest) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இது மாகாணத்தின் கல்வி நிர்வாகச் செயல்பாடுகளை மேலும் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே