தமிழரசு கட்சி மாவட்ட குழு தீர்மானம்: வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளரை மாற்ற நடவடிக்கை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த காலத்தில், வவுனியா வடக்கு பிரதேச சபையைக் கைப்பற்றுவதில் தமிழரசு கட்சிக்குள் கடுமையான போட்டி நிலவியது.
இதன்போது, தவிசாளர் பதவியைக் கோரிய ஏனைய மூத்த உறுப்பினர்களைச் சமரசம் செய்வதற்காகவே, "சுழற்சி முறையில் (Rotation Basis) தலா ஒரு வருடம்" தவிசாளர் பதவி வழங்கப்படும் என்ற நிபந்தனையுடன் கிருஸ்ணவேணி அவர்களிடம் முதலாமாண்டு தவிசாளர் பதவி ஒப்படைக்கப்பட்டது.
தற்போது அந்த ஓராண்டு காலம் நிறைவடைவதைத் தொடர்ந்தே மாவட்டக் குழு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் (வவுனியா நகர சபை, வவுனியா பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை) தமிழரசு கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு பெண் தவிசாளர் கிருஸ்ணவேணி மட்டுமே ஆவார்.
இதனால், இவரைப் பதவியிலிருந்து இறக்குவதற்கு கட்சியின் ஒரு தரப்பினர் ஆதரவாக இருந்தாலும், பெண் பிரதிநிதித்துவத்தை வலுவிழக்கச் செய்வதாகப் பொதுமக்களிடையேயும், மகளிர் அமைப்புகளிடையேயும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
கிருஸ்ணவேணி அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கத் தவறினால், கட்சி ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம் எனத் தெரிகிறது.
அதேவேளை, அவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில், அடுத்த ஓராண்டு காலத்திற்கு தவிசாளர் பதவியைக் கைப்பற்றுவதற்கு தமிழரசு கட்சியின் முக்கிய வவுனியா வடக்கு உறுப்பினர்கள் இருவர் ஏற்கனவே திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இது கட்சிக்குள் புதிய உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தியுள்ளதாகவும் வவுனியா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே