அளுத்கமவில் பயங்கரம்: சொகுசு விடுதிக்கு பின்புறமாக மனித தலை மீட்பு;
இலங்கையின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அளுத்கம, மொரகல்ல கடற்கரைப் பகுதியில் இன்று (மே 23) காலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணொருவரின் தலை அலைகளால் அடித்து வரப்பட்டு ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 9:00 மணியளவில் மொரகல்ல பகுதியிலுள்ள பிஸியான சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில், விசித்திரமான பொருள் ஒன்று கிடப்பதாக அளுத்கம பொலிஸாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், அங்கு ரத்தக் கறைகளுடன் காணப்பட்ட ஆணின் துண்டிக்கப்பட்ட தலையை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டது ஒரு ஆணின் தலை என்பது உறுதியாகியுள்ள நிலையில், உடலின் மீதிப் பாகங்களைக் கண்டறிவதற்காக கடற்படையினரின் உதவியுடன் ஆழ்கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அவசர தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தை பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர் யார் என்ற விபரம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால் அண்மைய நாட்களில் அளுத்கம, பேருவளை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் காணாமல் போனவர்கள் தொடர்பாகப் பதிவாகியுள்ள முறைப்பாடுகளை பொலிஸார் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
சொகுசு விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், நள்ளிரவில் யாராவது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினார்களா அல்லது கடலில் ஏதேனும் பொருட்களை வீசினார்களா என்பதை கண்டறியும் நோக்கில், அப்பகுதியில் உள்ள அனைத்து CCTV கேமராக்களின் காட்சிகளையும் பொலிஸார் பொறுப்பேற்றுப் பரிசோதித்து வருகின்றனர்.
குறித்த நபரைக் கொடூரமாகக் கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தலையைத் துண்டித்து கடலில் வீசினார்களா? அல்லது கடலில் ஏதேனும் விபத்துக்கள் இடம்பெற்றதா? என்ற பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக, மீட்கப்பட்ட தலை களுத்துறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )