நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய பசில் ராஜபக்சவுக்கு மாத்தறை நீதிமன்றம் பிடியாணை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை (Warrant) உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் (Browns Hill) பகுதியில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைச் சேர்த்து, காணி கொள்வனவு செய்தமை மற்றும் சொகுசு மாளிகை ஒன்றைக் கட்டியமை தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும். எனினும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதை அடுத்து நீதவான் இந்த கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
போதிய வருமான ஆதாரங்கள் இன்றி, முறைகேடான வழிகளில் திரட்டப்பட்ட பணத்தைக் கொண்டு மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சொகுசு சொத்துக்களை வாங்கியதாக நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் (FCID) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ச தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், அவரது உடல்நிலை மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களை முன்வைத்து ஆஜராவதிலிருந்து விலக்குக் கோரிய போதிலும், அதனை நிராகரித்த நீதவான், அடுத்த வழக்குத் தவணையின் போது அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
(வீடியோ இங்கே )