நாளை நிந்தவூர் வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க: பிரதேச சபையில் விசேட முடிவு
நாளை நிந்தவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வருகையை எவ்வித குறைகளுமின்றி சிறப்பாக நடத்துவதற்கு நிந்தவூர் பிரதேச சபை ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் இன்று (21) நடைபெற்ற விசேட அமர்வின் போதே இதற்கான முடிவுகள் எட்டப்பட்டன.
கலாசார மத்திய நிலையம்: பல வருடங்களாகப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிந்தவூர் கலாசார மத்திய நிலையத்தின் (Nintavur Cultural Centre) கட்டுமானப் பணிகளை, ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (Budget) முதற்கட்டமாக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு 945.04 மில்லியன் ரூபாய் என்பதுடன், 2027 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி: இத்துடன் அம்பாறை நகரில் அமையவுள்ள புதிய பல்நோக்கு நகர மண்டபக் (Multi-Purpose Town Hall) கட்டிடத்திற்கும் ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த வருகையானது நிந்தவூர் பிரதேசத்தின் நீண்டகால உள்கட்டமைப்பு மற்றும் கலாசார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்பதால், அரசியல் பேதங்களின்றி அதனைச் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் எனத் தவிசாளர் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட சபை உறுப்பினர்களான எஸ்.எம். ஷாபி, ஐ.எல்.எம். ஜாபிர், எம்.ஜே. ஜுவைரியா, கே.எம். ஜலீல், ஏ. இப்திகார், எம். சம்சுன் அலி மற்றும் எம்.ஏ.எம். றசீன் ஆகியோர் தமது ஆதரவை வெளியிட்டதுடன், பிரதேச அபிவிருத்தி சார்ந்த சில முக்கிய முன்மொழிவுகளையும் சபையில் சமர்ப்பித்தனர்.
அத்துடன், அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா' (Ditwah) சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பணிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டு ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )