நாடு முழுவதும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! 14 பேர் உயிரிழப்பு!
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாடு முழுவதும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த ஆண்டு நாடு முழுவதும் 27,754 டெங்கு நோய்த்தொற்றாளர்களும், 14 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக வைத்தியர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
மேற்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுர, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் கூடுதல் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது அனைத்து 25 மாவட்டங்களிலிருந்தும் டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாகவும், பருவமழை காலம் தொடங்குவதால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு பரவுவதைத் தடுக்க, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
அதேநேரம் காய்ச்சல், தசை வலி, தலைவலி, வாந்தி, குமட்டல் அல்லது உடலில் சிவப்புப் புள்ளிகள் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், குறிப்பாக அவற்றில் குறைந்தது இரண்டு அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே )