செல்வபுரத்தில் அட்டகாசம்: 1990 அம்புலன்ஸ் பணியாளர்கள் மீது சரமாரி தாக்குதல்!
செல்வபுரம் பகுதியில் நேற்று அதிகாலை அவசர மருத்துவ சேவைக்காகச் சென்ற 1990 'சுவசெரிய' தேசிய அம்புலன்ஸ் சேவையின் பணியாளர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவசர அழைப்பு ஒன்றினை ஏற்று, நோயாளியை மீட்பதற்காகக் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றிருந்த போதே அம்புலன்ஸ் சாரதி மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய இருவர் மீதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை வேளையில் செல்வபுரம் பகுதியில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய அம்புலன்ஸ் அங்கு விரைந்துள்ளது.
இதன்போது அங்கு நின்ற ஒரு குழுவினர் அம்புலன்ஸ் பணியாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, பின்னர் அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் காயமடைந்த அம்புலன்ஸ் பணியாளர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது அம்புலன்ஸ் வாகனத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவசர சேவைப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே )