இடைநீக்கம் செய்யப்பட்ட திறைசேரி அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!
நிதி அமைச்சகத்திற்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்கா ராஜபக்ச மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
முதலில் சடலத்தை அவதானித்த அவரது மகள், இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்ததாகவும், அவர் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த குளியாப்பிட்டிய பொலிஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தின் அருகே பெரிய இரத்தக் கறை படிந்திருந்ததாகவும், அதற்கு அருகில் கத்தியொன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜபக்சவின் கால் மற்றும் கையில் மூன்று வெட்டுக் காயங்கள் இனங்காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் இந்த தகவல்களை கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேநேரம் குளியாபிட்டிய நீதவான் நேற்று பிற்பகல் சம்பவ இடத்திற்குச் சென்று நீதித்துறை விசாரணையை நடத்தியுள்ளார்.
இதேவேளை திறைசேரியன் பணம் காணமால்போன விவகாரம் தொடர்பாகஅவர் மூன்று முறை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஒவ்வொரு முறையும் அவர் வந்து விசாரணைக்கு உதவியதாகவும், அவரது கணினியும் குற்றப் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை இடம்பெற்ற விசாரணைகளில் இவரின் கவனக் குறைவாலேயே போலி ஹேக்கர்கள் வழங்கிய இலக்கத்திற்கு பணம் வரவு வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஹேக்கர்களால் அனுப்பப்பட்ட முதல் மின்னஞ்சலுக்கு அவர்தான் பதிலளித்தார் என்று கூறப்படுகிறது. அவர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்த ஆரம்பகட்ட விசாரணையில் அவர் ஒரு ஊழல் அதிகாரி அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் அவரது கைதுக்கு ஆதரவான எந்த ஆதாரமும் இல்லை என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், இடைநீக்கம் செய்யப்பட்டதிலிருந்து அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )