திறைசேரி விவகாரம் : கடும் நடவடிக்கைக்கு சுமந்திரன் வலியுறுத்து!
திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திருடப்பட்ட விவகாரத்தில் திறைசேரியில் செயலாளர் பொறுப்புக்கூற மறுக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக பாராளுமன்ற சட்டங்கள் மற்றும் நிலையியற் கட்டளைகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசாங்க நிதி பற்றிய குழு அழைப்பு விடுக்கும்போது அக்குழுவில் முன்னிலையாவதற்கு திறைசேரியின் செயலாளர் மறுக்கமுடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கடந்த காலங்களில் நிதி அமைச்சர்கள் கூட அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டங்களில் முன்னிலையாகி, அதன் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.
அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின்படி, அரசாங்க நிதி தொடர்பான முழுமையான அதிகாரத்தைப் பாராளுமன்றம் கொண்டிருக்கவேண்டும்.
அதுமாத்திரமன்றி அந்த நிதியின் பாதுகாவலர் அதுகுறித்து பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற மறுக்கும் பட்சத்தில், பாராளுமன்ற சட்டங்கள் மற்றும் நிலையியற் கட்டளைகளின் கீழ் அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )