இலங்கை பரங்கியர் சமூகத்தின் ஆங்கிலப் புலமையில் பாரிய சரிவு: அதிர்ச்சித் தகவல்!
இலங்கையின் அண்மைய தொகைமதிப்பு தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த மொழியறிவு மட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், பரங்கியர் சமூகத்தினரிடையே ஆங்கில மொழியறிவில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வரலாற்று ரீதியாக ஆங்கில மொழிப்புலமைக்கு பெயர்பெற்ற ஒரு சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், ஒரு புள்ளிவிபர மாற்றம் என்பதைத் தாண்டி ஆழமான சமூக மாற்றங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கும் 2024 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த ஆங்கில மொழியறிவு 30.8% இலிருந்து 57.3% ஆக உயர்வடைந்துள்ளது.
ஏனைய அனைத்து இனத்தவர்களிடமும் ஆங்கில அறிவு அதிகரித்து வரும் நிலையில், பரங்கியர் சமூகத்தில் மட்டும் அது ஒரு பாரிய சரிவைக் கண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் 97.4% ஆக இருந்த ஆங்கில மொழியறிவு, 2024 ஆம் ஆண்டில் 79.3% ஆகக் குறைந்துள்ளது. இது எந்தவொரு சமூகத்திலும் ஏற்படாத மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
அதேவேளை, பரங்கியர்களிடையே ஏனைய உள்ளூர் மொழிகளின் அறிவு அதிகரித்துள்ளது. அவர்களின் சிங்கள மொழியறிவு 77.0% இலிருந்து 81.8% ஆகவும், தமிழ் மொழியறிவு 29.1% இலிருந்து 53.8% ஆகவும் உயர்வடைந்துள்ளது. குடிமதிப்புத் திணைக்களம் இதற்கான நேரடி காரணங்களைக் குறிப்பிடவில்லை என்றாலும், சில காரணிகள் இந்த மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கலாம்.
ஆங்கில மொழியில் சிறந்த புலமை கொண்ட பரங்கியர் சமூகத்தினர் கடந்த தசாப்தங்களில் அதிகளவில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.
இது உள்நாட்டில் எஞ்சியுள்ள அந்த சமூகத்தினரின் மொழியறிவுப் புள்ளிவிபரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அத்துடன், பரங்கியர் சமூகத்தில் ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கொண்ட மூத்த தலைமுறையினர் மறைந்து வரும் நிலையில், புதிய தலைமுறையினர் உள்ளூர் மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் ஒரு காரணமாக அமையலாம் என கருதப்படுகிறது. பரங்கியர் சமூகம் சிங்கள மற்றும் தமிழ் பேசும் மக்களுடன் அதிகளவில் கலந்து வாழ்வது மற்றும் கல்வி கற்கும் சூழல் காரணமாக, அவர்கள் உள்ளூர் மொழிகளில் அதிக தேர்ச்சி பெற்று ஆங்கிலத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளியிருக்கலாம்.
இதேவேளை, தேசிய ரீதியில் பார்க்கும் போது, இலங்கையின் ஒட்டுமொத்த மொழியறிவு 97.4% என்ற மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. சிங்கள மொழியறிவு அனைத்து இனத்தவர்களிடமும் அதிகரித்துள்ளதுடன், சிங்களவர்கள் மற்றும் பரங்கியர்களிடையே தமிழ் மொழியறிவும் கணிசமாக வளர்ந்துள்ளது.
(வீடியோ இங்கே )