ஈஸ்டர் தாக்குதல் மர்மம்: “அபு ஹிந்த்” குறித்து விசாரணை கோரும் பேராயர்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் காணப்படும் பல மர்மமான விடயங்கள் மற்றும் அவற்றை மறைக்க முற்படும் தரப்பினர் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விரிவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான பிரதான நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக இடம்பெற்ற கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மைகள் காலப்போக்கில் மறைக்கப்படுவது போன்றே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பலவீனப்படுத்தப்படுவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஸஹ்ரான் ஹாஷிமுடன் இரகசியமாகத் தொலைபேசியில் உரையாடிய 'அபு ஹிந்த்' எனும் நபர் யார்? தாக்குதலில் அவரது பங்கு என்ன என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.கட்டுவாப்பிட்டிய தாக்குதல்தாரி ஹஸ்தூனின் மனைவியான சாரா ஜாஸ்மின் சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், மூன்று மரபணு (DNA) சோதனைகளிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
அவர் உயிருடன் இருப்பதாகக் கூறப்படும் சாட்சியங்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும். அத்துடன், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவின் தொலைபேசி மற்றும் கணினித் தரவுகள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டது ஏன்? என்றும் அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
2018 ஆம் ஆண்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஸஹ்ரானின் குழுவினரே பொறுப்பு என்ற போதிலும், சில அதிகாரிகள் அதனை விடுதலைப் புலிகள் மீது சுமத்த முயன்றனர். இது விசாரணையைத் திசைதிருப்பும் ஒரு முயற்சியாகும். அதேநேரம், இந்திய உளவுத்துறை நான்கு முறை எச்சரிக்கை விடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சஹ்ரானுடன் தொடர்பிலிருந்த ஒருவரின் ஐபி (IP) முகவரியை அமெரிக்காவின் (FBI) வழங்கியபோது, அவரைப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரித்தனர்.
ஆனால், அது ஒரு 'தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசிய நடவடிக்கை' எனக் கூறி அந்த விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டது மேலும் 'சொனிக் சொனிக்' என்ற குறியீட்டுப் பெயரில் செயற்பட்ட காவல்துறை பரிசோதகர் பண்டார, தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்று அதன் தலைமையை வலியுறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு, தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சந்தேகத்திற்குரிய பாரவூர்தியை பரிசோதிக்காமல் விடுவிக்குமாறு அப்போதைய பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவிட்டது ஏன் என்பது விசாரிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவது ஆட்சியாளர்களின் கடமையாகும்.இந்தநிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கட்டுவாபிட்டியவில் வழங்கிய வாக்குறுதியின்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் உயர் அதிகாரிகளாகவோ அல்லது போர் வீரர்கள் என்று போற்றப்படுபவர்களாகவோ இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் பாய வேண்டும்" என்று கர்தினால் வலியுறுத்தினார்.
அப்பாவி மக்களின் இரத்தம் நீதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், கடவுள் ஒருநாள் நிச்சயமாகத் தீர்ப்பு வழங்குவார் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தனது உரையை நிறைவு செய்தார்.
(வீடியோ இங்கே )