இலங்கையின் உயர்கல்வித் தரம்: புதிய அறிக்கையின் முக்கிய தகவல்கள்
2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி , இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
குறிப்பாக, கலாநிதி (PhD) பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மொத்த உயர்கல்வித் துறையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, கலாநிதி (PhD) பட்டதாரிகள்: 2012 ஆம் ஆண்டில் 6,557 ஆக காணப்பட்ட கலாநிதி பட்டதாரிகளின் எண்ணிக்கை, 2024 இல் 11,757 ஆக உயர்ந்துள்ளது.
இது மொத்த மக்கள் தொகையில் 0.1% ஆகும். பல்கலைக்கழக பட்டதாரிகள்: பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2012 இல் 358,052 (3.0%) ஆக காணப்பட்ட இந்த எண்ணிக்கை, 2024 இல் 780,958 (5.6%) ஆக அதிகரித்துள்ளது.
மூன்றாம் நிலை கல்வி (Tertiary Education): மூன்றாம் நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்தவர்களின் எண்ணிக்கை 2,195,117 (18.2%) இலிருந்து 3,635,462 (26.2%) ஆக கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உயர்தரம் (G.C.E. A/L): க.பொ.த உயர்தரம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகைமை கொண்டவர்களின் எண்ணிக்கை 1,724,574 (14.2%) இலிருந்து 2,677,022 (19.4%) ஆக அதிகரித்துள்ளது.
இடைநிலைக் கல்வி (Secondary Education): இடைநிலைக் கல்வியைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 7,079,569 இலிருந்து 8,096,402 ஆக உயர்ந்துள்ளது.
இது இரண்டு காலப்பகுதிகளிலும் மொத்த மக்கள் தொகையில் சுமார் 58% ஆகும். ஆரம்பக் கல்வி (Primary Education): ஆரம்பக் கல்வியை மாத்திரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 2,214,792 (18.4%) இலிருந்து 1,738,942 (12.5%) ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
பாடசாலை செல்லாதோர்: முறையான பாடசாலைக் கல்வியைப் பெறாதவர்களின் எண்ணிக்கை 561,163 (4.7%) இலிருந்து 400,511 (2.9%) ஆகக் குறைவடைந்துள்ளது.
இந்தத் தரவுகளின்படி, இலங்கையில் அடிப்படை மற்றும் ஆரம்பக் கல்வி மட்டத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வித் தகைமைகளை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளமை உறுதியாகிறது.
(வீடியோ இங்கே )