தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு : இலங்கையிலும் விலையில் மாற்றம்?
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் ஏற்பட்டுள்ள புதிய நகர்வுகள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலகச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,204.67 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதும், முதலீட்டாளர்கள் லாபமீட்டலில் (Profit-booking) ஈடுபட்டுள்ளதும் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 88.31 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை பாரிய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது.
தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி காரணமாக, கொழும்பு செட்டியார்தெரு மற்றும் ஏனைய உள்நாட்டுத் தங்கச் சந்தைகளிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் அமெரிக்க டொலர் வலுவடைந்து வருவது இந்த விலை மாற்றத்திற்குப் பின்னணியாக உள்ளது.
குறிப்பாக, ஈரானுடனான மோதல் விரைவில் ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான ஆர்வம் முதலீட்டாளர்களிடையே சற்று குறைந்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு அடிப்படை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்