தமிழ் இன அழிப்பும், சுவிற்சர்லாந்தும்!

#SriLanka #Switzerland #government #Justice
Soruban
3 months ago
தமிழ் இன அழிப்பும், சுவிற்சர்லாந்தும்!

சுவிற்சர்லாந்து – இலங்கை 70 ஆண்டு தூதரக உறவுகள் கொண்டாடும் வேளை நீதி, பொறுப்புணர்வு மற்றும் நிலையான அரசியல் தீர்விற்காக சுவிற்சர்லாந்து கூட்டாட்சி அரசிடம் சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் வேண்டுகை (மனு) 03. 03. 2026 செவ்வாய்க்கிழமை அன்று 16.30 மணிக்கு கூட்டாச்சி அரசசெயலகத்தில் கையளிக்கப்பட்டது.

சுவிற்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகள் 1956ஆம் ஆண்டு தொடங்கி 2026ஆம் ஆண்டில் 70 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. இந்த வரலாற்றுப் பின்னணியில், சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினரும் சுவிஸ் குடிமக்களும் இணைந்து, நீதி, பன்னாட்டு பொறுப்புணர்வு மற்றும் நிலையான அரசியல் தீர்வை வலியுறுத்தும் விரிவான வேண்டுகை (மனு) ஒன்றை கூட்டாட்சி அரசிடம் கையளித்துள்ளனர்.

வேண்டுகைக்குழு சார்பாளர்களாக: திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் (இணைப்பாளர், சைவநெறிக்கூடம்), திருநிறை. பொன்னம்பலம் முருகவேள் (முதல்வர், பேர்ன் வள்ளுவன் பள்ளி), திருமதி. சயந்தினி கருணாகரன் (சைவநெறிக்கூடம், நொய்யென்பூர்க்), திருநிறை. சோமசுந்தரம் சந்துரு (பேர்ன் நகரசபை உறுப்பினர்) மற்றும் தில்லையம்பலம் சிவகீர்த்தி (சைவநெறிக்கூடம்) ஆகியோர் நேரில் சென்றிருந்தனர்.

இதன்படி 2026 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள இலங்கைப் பயணத்தின் போது, இலங்கை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கும் மாண்புமிகு கூட்டாட்சி அமைச்சர் திருநிறை. காசிஸ் (Bundesrat Ignazio Cassis) அவர்கள் செல்ல வேண்டும் என இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த சுவிற்சர்லாந்திலுள்ள தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் வேண்டுகின்றனர். பெரும்போர் கலாத்திலும் போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் இப்பகுதிகளே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாக உள்ளன. இன்றுவரை இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உரிய விசாரணையும், நீதியும் கிடைக்கவில்லை. தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை கோரி தமிழர்கள் உயிர் நேரிடரை  (அபாயத்தை) எதிர்கொண்டு இன்றுவரை அறவழியில் போராடி வருகின்றனர்.

வேண்டுகையில் ஒப்பமிட்ட மக்கள் முன்வைத்திருந்த வேண்டுகோள்கள் இவை ஆகும்:

  • வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான பயணத்தினை சுவிற்சர்லாந்து நடுவனரசு அமைச்சர் மேற்கொள்ள வேண்டும். தமிழ்மக்கள் நேர்வாழ்ந்த (அனுபவித்த) துன்பத்தை (வேதனையை) வெளிப்படையாக அறிந்தேற்றுவதுடன் (அங்கீகரிப்பதுடன்) பாதிக்கப்பட்ட தமிழர்கள், குடிமக்கள் அமைப்புக்களுடன் நேரடியாக உரையாடல்களை சுவிற்சர்லாந்து மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
  • இலங்கை அரசை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அல்லது பன்னாட்டு நீதிமன்றங்கள் போன்ற அமைப்புகள் மூலம், சார்பற்ற பன்னாட்டு விசாரணைகளுக்கும், போர் குற்றங்களின் வெளிப்படையான செயலாக்க ஆய்வுக்கும் ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்த வேண்டும். சுவிற்சர்லாந்து சார்பற்ற பன்னாட்டு விசாரணை அமைப்புகள் அனுமதிக்கப்படுவதற்கும் இலங்கை தற்போதுள்ள ஐ.நா. செயல்முறைகளுடன் கட்டுமானமான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் செயலில் ஈடுபடச்செய்ய உந்துதல் அளிக்க வேண்டும்.
  • இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான உண்மை கண்டறிதல், செயலாக்க ஆய்வு மற்றும் நீதிக்கான செயல்முறைகளுக்கு நல்லாதரவளிக்கும் வகையில் சுவிற்சர்லாந்திலுள்ள தமிழ்ப் புலம்பெயர் சமூகத்தை கட்டமைப்பு முறையில் இணைத்துக்கொள்ள வேண்டும். இப் பின்னணியில் வரவிருக்கும் இலங்கைப் பயணத்தை பன்னாட்டுச் சட்டம், மனித உரிமைகள் மற்றும் நிலையான அமைதி மேம்பாட்டின் கொள்கைகளை உறுதியாக முன்வைக்க பயன்படுத்துமாறு கையெழுத்திட்டுள்ளோர் சுவிற்சர்லாந்து கூட்டாட்சி அரசிடம் மரியாதையுடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வீடீயோவை பார்வையிட லிங்கை கிளிக் செய்யவும்>>> https://www.youtube.com/watch?v=GpAl46_PM10

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4