மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் - கொழும்பில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தம்
முதலாம் பதிவு - 10.18 - 28.02.2026
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, கொழும்பில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் நாளை 01ஆம் திகதி மதியம் 12.00 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்
- UL225 கொழும்பு / துபாய்
- UL226 துபாய் / கொழும்பு
- UL229 கொழும்பு / குவைத்
- UL230 குவைத் / கொழும்பு
- UL217 கொழும்பு / தோஹா
- UL218 தோஹா / கொழும்பு
- UL253 கொழும்பு / தம்மாம்
- UL254 தம்மாம் / கொழும்பு
- UL265 கொழும்பு / ரியாத்
- UL266 ரியாத் / கொழும்பு
மீளப் பதிவு செய்தல் மற்றும் மேலதிக உதவிகளுக்காக பயணிகள் 1979 என்ற உலகளாவிய தொடர்பு மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது www.srilankan.com இணையத்தளத்திற்குச் செல்லுமாறு அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது அந்தந்த பயண முகவர்களைத் தொடர்புகொள்ளுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாம் பதிவு - 10.30 - 28.02.2026
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் மீதான தாக்குதல், மத்திய நிலவி வரும் பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
மூன்றாம் பதிவு - 10.46 - 28.02.2026
குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல ஊழியர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பயணிகள் மற்றும் விமான நிலையத்திற்கு குறைந்த அளவிலான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் தெரிவித்துள்ளது.
நான்காம் பதிவு - 10:52 - 28.02.2026
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, குவைத் அரசு (குவைத் உள்துறை அமைச்சகம் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை) வெளியிடும் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு, குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அனைத்து இலங்கைப் பிரஜைகளிடமும் கேட்டுக் கொள்கிறது.
அவசியமற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன், தங்களது கைப்பேசிகளை எப்போதும் முழுமையாக Charge செய்யப்பட்ட நிலையில் வைத்திருப்பதும் முக்கியமானதாகும்.
ஐந்தாம் பதிவு - 12.06 - 01.03.2026
ஈரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் விழுந்து வரும் நிலையில், அந்த இடங்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க தடை விதித்து இஸ்ரேல் மக்களுக்கு அந்நாட்டின் ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏவுகணைகள் விழுந்த இடங்களின் துல்லியமான அமைவிடத்தை எதிரி நாடுகள் கண்டறிவதை தவிர்க்கவே இத்தகைய தணிக்கை நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )