டினோஜாவின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் - ரவிகரன் நம்பிக்கை!
முல்லைத்தீவு - சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்படுமென சுகாதார அமைச்சர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவிற்கும், சுகாதார அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே சுகாதார அமைச்சர் இந்த உறுதியை வழங்கியதாகவும், கூறினார்.
முல்லைத்தீவு சிலாவத்துறை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, திடீரென உயிரிழந்தார்.
சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து, அவரின் உறவினர்கள் துறைசார் அதிகாரிகளிடம் முறைபாடு செய்தனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.