யாழில் பனை அபிவிருத்தி சபையின் ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல்!

பனை அபிவிருத்தி சபையின் ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடலானது நேற்றைய தினம் ( 31.07.2025 ) பி.ப 3.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ சமந்த விஜயரத்னா அவர்களும், சிறப்பு விருந்தினராக கடற்றொழில் நீரியல் வழங்கல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கெளரவ இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும், கெளரவ விருந்தினர்களாக வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும்,பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும், இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் செயலாளர் திரு. பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் மற்றும் பனை அபிவிருத்திச் சபையின் பதில் தலைவர் திரு. வி. தவராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தமதுரையில்,பனை மரங்கள் இலங்கையின் பொக்கிஷமாகும் எனவும், பனை சார் பொருட்களின் ஏற்றுமதியின் மூலமான வருமானத்தை தேயிலையின் ஏற்றுமதி மூலமான வருமானத்தை விட அதிகமாக பெறமுடியும் எனவும் குறிப்பிட்டார். மேலும், இதற்கு பனை துறையை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனவும் பனை சார் அதிகாரிகளின் செயற்பாடுகள் சிறப்பாக இருக்குமானால் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் எனவும், மேலும் இது தொடர்பில் அனைவரும் இணைந்து தீர்மானங்களை மேற்கொண்டு இத் துறையை புதிய திசையை நோக்கி கொண்டுசெல்ல வேண்டுமெனவும் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கின்ற மற்றும் வரவேற்கின்ற கூட்டமாக இது அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு அரசாங்கத்தற்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த வளத்தை உற்பத்தியாளர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தினால் அவர்களின் எதிர்காலத்தை செல்வச்செழிப்புள்ளதாக மாற்றமுடியும் என்றும் கெளரவ அமைச்சர் மேலும் தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ சமந்த விஜயரத்னா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, இன்றைய பனை அபிவிருத்தி கலாசாரத்தில் ஈடுபட்டதில் தான் மகிழ்வடைதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வந்த முதலாவது சந்தர்ப்பம் என்பதால் மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பண்பாட்டு ரீதியாக ஏற்றுமதி பயிர்களை விட பனை அதிகமாக உள்ளதாகவும்பனை சாா் அபிவிருத்தியில் ஆய்வுகள், உற்பத்தி மேம்பாடு மூடப்பட்ட உற்பத்திச் சாலைகளை மீள் இயங்க வைத்தல், விற்பனை நிலையங்கள் அமைத்தல் போன்றவற்றில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் 2025 ஆம் ஆண்டு பனை சாா் அபிவிருத்திக்கு 45 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார். மேலும், பனை சாா் உற்பத்தியில் இளைஞர்களை அதிகமாக ஈடுபட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பனை உற்பத்தி பானங்களை பாடசாலை மட்டத்தில் விநியோகிக்க கல்வி அமைச்சுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். சுற்றுலாத்துறையுடன் இணைந்து பனை சார் உற்பத்தி பொருட்களை சர்வதேச மட்டத்தில் நடாத்தப்படும் கண்காட்சிகளில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், திக்கம் வடிசாலையை மீள் இயங்க வைப்பதறகான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இவ் பனை சார் உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பும் அதிகமாக உள்ளதாகவும் அதனை மேலும் முன்னேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்து, தென்னை அபிவிருத்தி சார் நடவடிக்கைகளுக்காகவும், வடக்கு தென்னை முக்கோண வலய செயற்பாடுகளை தொடங்குவதற்காகவும் அதிமேதகு ஜனாதிபதி விரைவில் வடக்கிற்கு வரவுள்ளதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்து, அதற்கான தயார்படுத்தல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைசாா் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.
பனை சார் உற்பத்தி ஏற்றுமதி நிறுவனங்கள், பனைசார் பொருள் உற்பத்தியாளர்கள், கைப்பணிப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், இந் நிகழ்வில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடனான பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பனை அபிவிருத்திச் சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



