முல்லைத்தீவில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரித்ததாலேயே மரணம்!

கனடாவுக்குச் செல்வதற்குத் தயாரான நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யோகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா சஜீவனின் மரணம் கழுத்து நெரித்ததாலேயே நிகழ்ந்துள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ உறுதிப்படுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய ஆனந்தரசா சஜீவன் என்ற இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். கடந்த 29ஆம் திகதி 20 இலட்சம் ரூபா பணத்தை டொலராக மாற்றவுள்ளதாக வீட்டில் குறிப்பிட்டு விட்டு, யோகபுரத்திலிருந்து பாண்டியன் குளத்திற்குச் சென்றுள்ளார். வங்கியில் பணிபுரியும் அவர், பேருந்து உரிமையாளருமாவார். அவர் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். அவரிடம் சுமார் 1.5 கோடி ரூபா கடன் வாங்கிய தரப்பினர் சில காலமாக பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
அந்த வீட்டினருக்கும் அவர் அழைப்பேற்படுத்தியுள்ளார். இரவு 8.40 மணிக்குப் பின்னர் அவருடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் கிடைக்காத நிலையில் நண்பர்கள் அவரைத் தேடிச் சென்றிருந்தனர். மறுநாள் அதிகாலை 3.00 மணியளவில் வவுனிக்குளம் குளக்கரையில் அவருடைய மோட்டார் சைக்கிள் காணப்பட்டபோதிலும் அவரைக் காணவில்லை. சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக வவுனிக்குளத்தின் நீர்வெளியேறும் பகுதி ஒன்றிலிருந்து அவரின் சடலம் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.எச் மக்ருஸ் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்ற உடற்கூற்று பரிசோதனை முடிவுகளின் படி, குறித்த இளைஞரின் மரணம், கழுத்து நெரித்ததாலேயே நிகழ்ந்துள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ உறுதிப்படுத்தியுள்ளார்.
விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



