மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

மூதூர் - அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்து அக்கல்லூரி ஆசிரியர்கள் கடமைக்குச் செல்லாது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
மூதூர் - அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தரம்-9 ல் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் அடித்ததனால் அவரது பெற்றோர் ஆசிரியர்மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கல்லூரியில் பரீட்சையை முன்னிட்டு மேசைகளை அடுக்கி சில ஒழுங்குகள் இடம்பெற்றதாகவும் இதன்போது குறித்த மாணவன் குறித்த ஆசிரியரின் கட்டளைக்கு இணங்கி செயற்படவில்லை எனவும் இதனால் கண்டித்ததாகவும் இருப்பினும் மாணவன் குறிப்பிடுகின்ற அளவுக்கு கண்டிக்கவில்லை எனவும் ஆசிரியர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குறித்த மாணவன் பெற்றோருடன் சென்று மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் தாக்கியுள்ளதாக கையில் இருந்த காயங்களை காண்பித்து முறைபாடு செய்திருந்தார்.
அதன் பின்னர் மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் உட்பட 3 பேருக்கு மேற்பட்டோர் பாடசாலைக்குச் சென்று அதிபர் காரியாலயத்தில் வைத்து அதிபர் மற்றும் இன்னுமொரு ஆசிரியருக்கு முன்பாக குறித்த ஆசிரியரை தாக்கியுள்ளதாக ஆசிரியர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவனின் தந்தை உட்பட மூவர் அதிபர் காரியாலயத்திற்குள் வந்து தன்னை தாக்கியதாகவும் இது அங்கு இருக்கின்ற சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் இதன் பின்னர் தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த ஆசிரியர் தெரிவிக்கின்றார். இருப்பினும் தாங்கள் ஆசிரியரை தாக்கவில்லை என பெற்றோர் தரப்பினர் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னர் பாடசாலை அதிபரினால் ஆசிரியர்மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராக மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது இதனையடுத்து குறித்த நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் அவர்களை தேடி சென்றிருந்தபோதும் இன்று (22) மாணவனின் தந்தையுடன் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையிலேயே இன்றையதினம் (22) குறித்த பாடசாலையில் கற்பிக்கும் 41 ஆசிரியர்களில் 34 ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைக்கு விண்ணப்பித்து பாடசாலைக்கு செல்லவில்லை எனவும் தெரிய வருகின்றது. பிள்ளைகளை கண்டித்து நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களுக்கும் இருக்கின்றது.
எனினும் அந்த அதிகாரத்தை கையில் எடுத்து கண்டிப்பின் எல்லையை ஆசிரியர்கள் எப்போதும் தாண்டிவிடக்கூடாது. அதேபோன்று எல்லை மீறி கண்டிக்கும் ஆசிரியரை பாடசாலைக்குச் சென்று தாக்கும் அதிகாரம் பெற்றோருக்கு இல்லை.
இருப்பினும் அவர்மீதான் முறைப்பாடை முதலாவதாக கல்வி நிர்வாக ரீதியாகவும் பின்னர் ஏனைய பொறிமுறைகள் ஊடாகவும் அவருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். இந்த சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.
எனவே பாதிக்கப்பட்ட இரு தரப்பினரும் சமாதானமான முறையில் பயணிப்பதன் ஊடாக சிறந்த கல்விச் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும். இன்றைய காலகட்டத்தில் தவறான வழியில் செல்கின்ற மாணவர் சமுதாயத்தை அவதானிக்க முடிகின்றது.
இவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு பெற்ரோரினதும் ஆசிரியர்களினதும் கைகளில்தான் இருக்கின்றது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



