பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு - சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் கருத்து!

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க தாயகம் ஒன்றிணைந்து எழுச்சி பெற வேண்டும் என்று அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடுசெய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கட்டுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை இலங்கை குறைக்குமாக இருந்தால் அமெரிக்கர் சமரசத்திற்கு வரலாம். வியட்னாம் அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பூச்சியவரியை விதித்தே சமரசத்திற்கு வந்து தனது ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரியை 20 வீதமாகக் குறைத்தது. அவ்வாறு பூச்சிய வரியை விதிப்பது இலங்கைக்கு இலகுவான ஒன்றல்ல. பொருளாதார நெருக்கடியினால் இலங்கைக்கு அதிகளவு டொலர் தேவைப்படுகின்றது.
பொருளாதார சமரச முயற்சிகளுக்குகூடாக நகர்வது இலங்கைக்கு கடினமாக இருக்கும். அமெரிக்க ஜனாதிபதி இலகுவில் இறங்கி வர மாட்டார். அரசியல் பக்கமாக நகர்ந்தால் சிலவேளை வெற்றிகள் கிடைக்கலாம். பூகோள அரசியல் பிரச்சினையும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து தொடர்ந்தும் செயல்படப் போகின்றன. இது தொடர்கதையாக இருக்கும் நிலையில் தமிழ்த் தரப்பும் தங்கள் நலன்களிலிருந்து இந்த விவகாரத்தை கையாளத் தவறக்கூடாது. இதனை வரலாறு தமிழ் மக்களுக்கு தந்த சந்தர்ப்பம் என்றே கருத வேண்டும். அமெரிக்காவின் 20 வீத வரிவிதிப்பு ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரப்போகின்றது.
இடையில் சிலவேளை மாற்றங்கள் வரலாம். இனனோர் பக்கத்தில் ஐரோப்பிய யூனியன் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை வழங்குவது தொடர்பான உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. பிரிட்டன் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு பூச்சிய வரியை விதிக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இந்த விவகாரங்களில் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் இணைத்துக் கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும் பொருளாதாரப் பிரச்சினையின் அடி வேரே இனப் பிரச்சனை தான்.
இனப்பிரச்சினையை தீர்க்காமல் பொருளாதார நெருக்கடிக்கு முழுமையான தீர்வை காண முடியாது என்பதை இந்த நாடுகளுக்கு புரிய வைக்க வேண்டும். இதனால் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு நிபந்தனைகளாக தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க வேண்டும் என்பதை முன் வைக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும் . இதற்கு தாயகத்தில் இருந்து ஒருங்கிணைந்த குரல் எழுச்சியடைய வேண்டும்என்றுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



